நெல்லை ஜான் முத்துNELLAI JOHN MUTHU
WhatsApp

அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி · தொகுதி எண் 225

சட்டம் ஒன்று சொல்கிறது. தரையில் வேறொன்று.

ஒவ்வொரு பிரச்சினையையும் மூன்று கேள்விகளாகப் பிரித்திருக்கிறேன். சட்டப்படி என்ன கிடைக்க வேண்டும். உண்மையில் என்ன நடக்கிறது. இதுவரை என்ன செய்யப்பட்டது.

Each issue below is set out as three questions: what the law entitles residents to, what actually happens on the ground, and what has been filed so far.

01 · குடிநீர்

தொட்டி இருக்கிறது. தண்ணீர் இல்லை.

சட்டப்படி: குடிநீர் வழங்குவது ஊராட்சியின் கடமை. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன் கீழ் இது விருப்பப் பணி அல்ல, கட்டாயப் பணி.

தரையில்: தொட்டி கட்டப்பட்டிருக்கும். குழாய் போடப்பட்டிருக்கும். மோட்டார் எரிந்திருக்கும், அல்லது தொட்டி பழுதாகி விழும் நிலையில் இருக்கும். திட்டம் "நிறைவேற்றப்பட்டது" என்று கோப்பில் எழுதப்பட்டிருக்கும். மக்கள் இன்னும் குடம் தூக்குகிறார்கள்.

இதுவரை: உப்பார கூலனி மேல்நிலைத் தொட்டி மற்றும் புதுக்கூலனி குடிநீர்த் தட்டுப்பாடு — இரண்டுக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உங்கள் ஊரில் இதே பிரச்சினை இருந்தால்

தொட்டி கட்டிய ஆண்டு, திட்டத்தின் பெயர், செலவழிக்கப்பட்ட தொகை — இந்த மூன்றையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கலாம். எப்படி என்று இங்கே பாருங்கள்.

02 · தாமிரபரணி

நதி இருக்கும் தொகுதியில் தண்ணீர்ப் பிரச்சினை

சட்டப்படி: பாசன வாய்க்கால், குளம், ஏரி பராமரிப்பு ஊராட்சி மற்றும் பொதுப்பணித் துறையின் பொறுப்பு. தூர் வாருதலுக்கு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்படுகிறது.

தரையில்: வாய்க்கால் தூர்ந்திருக்கும். கரை உடைந்திருக்கும். ஆக்கிரமிப்பு இருக்கும். தூர் வாரும் பணிக்கான நிதி எத்தனை முறை வந்தது, யார் ஒப்பந்தம் எடுத்தார்கள் என்பது வெளியே தெரியாது.

இதுவரை: தெற்கு வீரவநல்லூர், தருவை மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் கள ஆவணப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீர் நிலைகளின் நிலை காணொளியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

A constituency with a perennial river should not have a water problem. The gap is not rainfall — it is maintenance spending that is never accounted for in public.

03 · மஞ்சோலை

மலைத் தோட்டத் தொழிலாளர்களின் நிச்சயமற்ற நிலை

சட்டப்படி: தலைமுறையாக ஒரு இடத்தில் வாழ்பவர்களுக்கு வாக்குரிமை, குடியிருப்பு உரிமை, அடிப்படை வசதி — அனைத்தும் உரிமை. விருப்பமல்ல.

தரையில்: வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்படுவது, முகவரிச் சான்று பெறுவதில் சிக்கல், மருத்துவம் மற்றும் பள்ளிக்கான தூரம் — இவை தொடர்ந்து இருக்கின்றன.

இதுவரை: வாக்காளர் பட்டியல் நீக்கங்கள் குறித்த ஆவணச் சேகரிப்பு நடைபெற்று வருகிறது. பெயர் நீக்கப்பட்டவர்கள் படிவம் 6 மூலம் மீண்டும் சேர்க்கக் கோர உதவி அளிக்கப்படுகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா?

ஆண்டுக்கு ஒருமுறையாவது சரிபார்த்துக் கொள்ளுங்கள். பெயர் நீக்கப்பட்டிருந்தால் மையத்தில் தெரிவியுங்கள் — படிவம் 6 இலவசமாக நிரப்பித் தரப்படும்.

04 · மின் இணைப்பு

பதின்மூன்று ஆண்டுகளாக மின்சாரம் இல்லாத வீடு

சட்டப்படி: மின் நுகர்வோர் உரிமை விதிகள் 2020-ன் படி விண்ணப்பித்த பிறகு குறிப்பிட்ட நாட்களுக்குள் இணைப்பு வழங்கப்பட வேண்டும். வாழ்வாதார உரிமையில் அடிப்படை வசதியும் அடங்கும் என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு (Chameli Singh v. State of U.P.).

தரையில்: புதுக்குடியில் ஒரு வீட்டுக்கு 2013–14 முதல் மின் இணைப்பு மறுக்கப்பட்டது. காரணம் நில ஆவணச் சிக்கல். இது ஒருவரின் பிரச்சினை அல்ல — நத்தம் நிலப் பட்டா பிரிவினை நடக்காத பல குடும்பங்களுக்கு இதே நிலைதான்.

இதுவரை: மாவட்ட ஆட்சியர் மற்றும் நீதிபதிக்கு 17 பக்க முழு சட்ட ஆவணத்துடன் மனு தாக்கல் செய்யப்பட்டது. நத்தம் நிலத்திற்கான குற்றப்பட்டா பிரிவினை நடைமுறை குறித்து தனி வழிகாட்டி தயாரிக்கப்பட்டது.

05 · கிராமச் சபை

ஆண்டுக்கு நான்கு கூட்டங்கள். எத்தனைக்கு நீங்கள் போயிருக்கிறீர்கள்?

சட்டப்படி: அரசியலமைப்பின் 73-வது திருத்தமும் பிரிவு 243G-யும் ஊராட்சிக்குத் திட்டமிடும் அதிகாரத்தைத் தருகின்றன. கிராமச் சபைக் கூட்டம் ஆண்டுக்கு நான்கு முறை கட்டாயம். வரவு செலவு அங்கே வெளியிடப்பட வேண்டும்.

தரையில்: கூட்டம் நடந்ததாகக் குறிப்பேட்டில் கையெழுத்து இருக்கும். மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள். எத்தனை லட்சம் வந்தது, எந்தப் பணிக்குச் செலவானது என்பது வெளியே வராது.

இதுவரை: அத்தலநல்லூர், புதுக்குடி உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு வார்டு உறுப்பினர் தொடர்பு பட்டியலும் புகார் செல்ல வேண்டிய வழியும் தொகுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஊராட்சி வார்டு 20-க்கான முழுக் கிராமப் பட்டியல் தயார்.

Four gram sabha meetings a year are mandatory, and the accounts must be read out at them. The signature register says they happened. Residents say they did not know. That gap is the single biggest source of unaccounted rural spending.

06 · வேலைவாய்ப்பு

படித்த பிள்ளைகள் ஊரை விட்டு வெளியேறுவது

சட்டப்படி: கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம், சுய உதவிக் குழு கடன், தொழில் முனைவோர் திட்டங்கள் — ஆவணத்தில் இருக்கின்றன.

தரையில்: திட்டம் இருப்பது தெரியாது. தெரிந்தாலும் விண்ணப்பிக்கத் தெரியாது. அனுபவச் சான்றிதழ் இல்லாததால் வங்கிக் கடன் கிடைக்காது. ஒரு தலைமுறை சென்னைக்கும் திருப்பூருக்கும் வெளிநாட்டுக்கும் போய்க்கொண்டே இருக்கிறது.

இதுவரை: வடக்கு கருக்குறிச்சி மகளிர் சுய உதவிக் குழுவுக்கு நடைமுறை மூலதனத் திட்டங்கள், அனுபவச் சான்றிதழ் பெறும் வழிமுறைகள், வங்கி இணைப்பு உத்தி — முழு வழிகாட்டுதல் அளிக்கப்பட்டது.

07 · பாதுகாப்பு

மூடப்படாத கிணறு. விழும் நிலையில் தொட்டி.

சட்டப்படி: பொது இடத்தில் ஆபத்தான கட்டமைப்பு இருந்தால் அதை உடனடியாகச் சரி செய்வது ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்தின் கடமை.

தரையில்: மேலப்புதுக்குடி நாடார் தெற்குத் தெருவில் குழந்தைகள் நடமாடும் இடத்தில் மூடப்படாத கிணறு. உப்பார கூலனியில் பழுதடைந்த மேல்நிலைத் தொட்டி. விபத்து நடந்த பிறகுதான் நடவடிக்கை என்று காத்திருக்க முடியாது.

இதுவரை: இரண்டுக்கும் அவசரப் பாதுகாப்பு மனுக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி அலுவலருக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

உங்கள் ஊர் · பட்டியலில் இல்லையா?

உங்கள் கிராமப் பிரச்சினையைச் சொல்லுங்கள்

இந்தப் பட்டியல் முழுமையானது அல்ல. சேரன்மகாதேவி ஒன்றியத்தில் இருபது கிராமங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் ஏதோ ஒன்று நிலுவையில் இருக்கிறது.

உங்கள் ஊரில் உள்ள பிரச்சினையைச் சொன்னால் அதற்குச் சட்டப்படி பொறுப்பான அலுவலகம் எது என்பதைச் சொல்கிறேன். மனு தேவைப்பட்டால் இலவசமாக எழுதித் தருகிறேன்.